வணக்கம் நண்பர்களே,
நான் முன் பதிவுகளில் கூறியது போல எனக்கு பிடித்த பூந்தளிர் கதைகளை உங்களுடன் அவ்வபொழுது பகிர்ந்து கொள்ள உள்ளேன்.
இது ஒரு சோதனை முயற்சியே.
என்னுடைய ஆசை நான் பகிர்ந்துகொள்ளும் இக்கதைகளை உங்கள் வீட்டு சிறார்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே.
ஒரு வழியாக ஒரு all in one HP பிரிண்டர் வாங்கிவிட்டேன்.அதில் மூலம் வரும் முதல் பதிவு.
படங்களை சற்றே மேம்படுத்தி உள்ளேன்.புத்தகத்தின் காகிதங்கள் சற்றே பழுப்படைந்து உள்ளதால் படங்களும் இப்படி உள்ளன.
இதனை மேலும் மேம்படுத்த நண்பர்கள் ஆலோசனை வழங்கினால் செயல்படுத்த முயற்சி செய்கிறேன்.
பூந்தளிரின் ஆசிரியராக நமது வாண்டுமாமா இருந்த சமயத்தில் வந்த ஒரு இதழ்.
படக்கதைகள்,சிறுகதைகள்,வேடிக்கை விநோதங்கள் மற்றும் ஒரு சில தொடர்கதைகள் என முற்றிலும் ஒரு கதம்பமாக இந்த இதழை வழங்கி உள்ளார்.
முதல் கதை "உலகின் மகத்தான காட்சி" நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு கதை.
தான் ஆசையாய் வளர்க்கும் எருமை மாடு பூவை வயதானதால் காட்டிற்குள் துரத்தபோகும் தந்தையிடம் இருந்து காப்பாற்ற போராடும் சிறுவன் டுடுவின் கதை.
டுடுவும் அவனது நண்பன் லாசியும் சேர்ந்து அதற்கு நடனம் கற்று தருகின்றனர்.
பின் ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து "உலகின் மகத்தான காட்சி" யை காண்பிக்க போவதாக கூறுகின்றனர்.
மக்கள் வந்ததும் வாத்தியங்கள் முழங்கி பூவை ஆட சொல்கின்றனர்.ஆனால் அது ஆட மறுக்கின்றது. பின்னர் அனைவரும் பொறுமை இழந்து கிளம்பும் பொழுது அது ஆட அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அதனை கண்டு குர்பச்சன்சிங் என்பவர் பூவின் வாழ்நாள் முழுவதும் அதன் உணவிற்கான தொகையை தான் ஏற்று கொள்வதாக கூறுகிறார்.
அடுத்த படக்கதை நமது சுட்டிக் குரங்கு கபீஷுனுடயது.வேட்டைக்காரன் தோப்பையாவிடம் மாட்டிக்கொண்ட கிளிகளை எப்படி காப்பாற்றுகிறான் என்பதை படித்து பாருங்கள்.
அடுத்தது வழக்கம் போல தனது உணவிற்காக போராடும் சமந்தகனை ஏமாற்றும் காக்கை காளியின் கதை.
நான் சிறுவனாக இருந்த பொழுது ஒருமுறை எனக்கு மிகவும் காய்ச்சல் அதனால் எனக்கு மிகவும் (கள்ள) பசி எடுத்தது. எனது தாயார் சமைத்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் நான் பார்வதி சித்திர கதைகளில் வந்த காளியின் கலாட்டா புத்தகத்தை படித்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒவ்வொரு கதையிலும் சமந்தகனின் உணவை காளி காபாற்றிகொண்டிருக்க, அவனது பசி எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். அந்நிகழ்ச்சி நான் எப்பொழுது காளியின் கதை படிக்கும் பொழுதும் எனக்கு நினைவிற்கு வரும்.
பசுவை பற்றிய ஒரு முழு ஆவண படக்கதை.
அடுத்து நமது முட்டாள் சுப்பாண்டியின் கதை.சுப்பாண்டி வெந்நீர் போடும் அழகை பாருங்கள்.
இனி வரும் பூந்தளிர் கதைகள் பதிவுகளில் சார்லி மாமா,துப்பறியும் ரஞ்சன்,மதியூகி மந்திரி இப்படி இன்னும் பலருடைய கதைகளை காண்போம்.
இப்பதிவை பற்றிய உங்கள் கருத்தை பின்னுட்டத்தின் மூலம் கூறுங்கள் நண்பர்களே.
அவ்வளவு தான் நண்பர்களே.மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வே வெ .