Wednesday, December 25, 2013

Briyani vs Endrendrum Punnagai - திரைவிமர்சனம்

வணக்கம் நண்பர்களே,

சமீபமாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்கவே முடிவதில்லை. சென்ற மாதம் முழுவதும் அனைத்து வாரங்களும் பிரயாணம் செல்ல வேண்டி இருந்தது.

பின் அப்பாடா என்று Gravity படம் புக் செய்தால் ஆபிசில் ஒரு பிரச்சனை வந்து வார இறுதியை அங்கேயே கழிக்க வேண்டி ஆகிவிட்டது.

இப்படி நான் தவற விட்ட படங்கள் பல. இறுதியில் ஒரு வழியாக தியேட்டருக்கு சென்று பார்த்துவிட்டேன்.அதுவும் ஒன்றல்ல இரண்டு படங்கள்.நேற்று இரவு என்றென்றும் புன்னகை இன்று மதியம் பிரியாணி.அதிஷ்டவசமாக இரண்டு படங்களுமே ஏமாற்றவில்லை.

நான் பொதுவாக படங்களின் விமர்சனங்களை Sify வலைப்பூவில் பார்ப்பது வழக்கம்.படம் வெளியான அன்றே பிரியாணி படம் படு மொக்கை என்ற அளவு விமர்சித்திருந்தனர்.அதுவும் இல்லாமல் நான் கேள்விபட்ட  செய்தி வேறு நினைவுக்கு வந்தது.

தீபாவளி சமயத்தில் வெளிவந்த ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் கடந்த வாரம் வெளிவந்த பிரியாணி இரண்டுமே ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் திரைப்படங்கள். தீபாவளிக்கு முன்பே இரண்டு படங்களுமே தயாறகிவிட்டன என்றும் திரைப்படங்களை போட்டு பார்த்துவிட்டு இரண்டில் அழகுராஜா நன்றாக இருக்கிறது என்று முடிவு செய்து தீபாவளிக்கு தலையின் ஆரம்பம் படத்தின் போட்டியாக வெளியிட்டனர் என்றும் கேள்விப்பட்டேன்.

அழகுராஜாவின் முடிவு அனைவரும் அறிந்ததே, இரண்டில் நன்றாக உள்ளது என்று தேர்வு செய்த படத்தின் நிலையே அப்படி என்றால் நிராகரிக்கப்பட்ட படம் எப்படி இருக்கும் என்ற பயம் இருந்தது.அதற்கு தகுந்தது போலவே Sify வலைப்பூவின் விமர்சனமும் இருந்தது.

இந்த நிலையில் நம்பிக்கையூட்டும் விதமாக வந்தது நண்பர் ராஜின் இந்த பதிவு. அது தான் பிரியாணி நன்றாக இருக்கிறது என்று முதலில் எனக்கு கூறியது.

இனி இரண்டு படங்களை பற்றிய எனது கருத்து.

என்றென்றும் புன்னகை :




கதை :


தனது தாய் சிறுவயதில் வேறு ஒருவருடன் சென்றதை அடுத்து பெண்கள் என்றாலே ஒரு வெறுப்புடன் வளரும் ஜீவா.அதனை மறக்க தந்தை நாசருடன் சென்னை வரும் ஜீவாவிற்கு பள்ளியில் வினய் மற்றும் சந்தானம் அறிமுகமாகிறார்கள்.

அதில் இருந்து மூவரும் ஒன்றாகவே வளருகிறார்கள்.தூங்குவது தண்ணி அடிப்பது சண்டை போடுவது எல்லாமே ஜீவாவின் வீட்டில் தான்.



இதற்கிடையில் ஒரு காரணத்திற்காக ஜீவா தனது தந்தையுடன் 15 வருடங்களாக பேசாமல் இருக்கிறார்.

மூவரின் ஒரே கொள்கை வாழ்வில் மூவருமே கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பது எனபது தான், சந்தானத்தின் வார்த்தையில் மூவரும் மொட்டை பசங்களாக இருக்க முடிவு செய்கிறார்கள்.

மூவரும் சேர்ந்து ஒரு விளமபர நிறுவனம் நடத்துகிறார்கள்.அப்பொழுது மற்றொரு நிறவனத்தின் மூலம் இவர்களுக்கு அறிமுகமாகிறார் திரிஷா.சும்மா சொல்ல கூடாது இப்படத்தில் அழகாகவே இருக்கிறார்.

அவர்களது விளம்பரத்தில் நடிக்க வரும் மாடல் ஆண்ட்ரியா ஜீவா மேல் மோகம் கொள்கிறார்.அவரை அடித்து அவமானப் படுத்துகிறார் ஜீவா.

இந்த இடத்தில் ஆன்டிரியா வினயை மயக்கி கல்யாணம் செய்து நண்பர்களை பிரிப்பார் என்று நினைத்த எனது நினைப்பில் டைரெக்டர் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்.

அடுத்து திடீரென நண்பர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டு ஜீவாவை தனிமை படுத்திவிடுகின்றனர்.

இடைப்பட்ட நேரத்தில் திரிசாவுடனான நட்பு வளருகிறது.அது காதலாக மலரும் நேரத்தில் தனது ஈகோ வினால் காதலை இழந்துவிடுகிறார்.



இறுதியில் தனது ஈகோ வை விட்டு தனது தந்தை நண்பர்கள் மற்றும் காதலியுடன் சேர்ந்தாரா எனபது இறுதிக்கதை.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது :


தேவையில்லாத திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தெளிந்த நீரோடை போல செல்கின்றது.

தேவையில்லாத சண்டைகள் இல்லாதது.

பாடல்கள் ஓகே ரகம் இடைவெளிக்கு பின்பு வந்த இரண்டு பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது.

கேமரா மிகவும் அருமை, எடுக்கப்பட்ட லொகேசன்களும் கண்ணுக்கு குளிர்ச்சியாக நன்றாக இருக்க படத்திற்கே ஒரு ரிச் பீலிங் வந்துவிடுகிறது.

படத்தில் நடித்தவர்கள் அனைவரின் நடிப்பு. முக்கிய மற்றும் துணை நடிகர்கள் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.ஜீவா,வினய் மற்றும் சந்தானம் ஆகிய மூவரின் நட்புமே ரியலாக தெரிந்தது படத்தின் பெரிய பிளஸ்.

காமெடி நன்றாகவே இருந்தது.முதல் பாதி முழுவதுமே படத்தை தூக்கி நிறுத்துவது சந்தானத்தின் கவுன்டர்கள் தான்.

இனி பிடிக்காதது :


அதிகம் இல்லை இருந்தாலும் ஒரு சில மட்டும்.

ஒரு பீல் குட் பிலிம் ஆக  இருந்தாலும் சந்தானத்தின் காமெடியில் அதிக இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததை தவிர்த்து இருக்கலாம்.

படத்தின் இறுதிக்காட்சிகள் அழத்தம் இல்லாதது போல தோன்றியது.
அதுவும் ஜீவா நண்பரின் முன்னால் திரிஷாவை தெரியாது என்பதற்கு போதிய காரணம் இல்லை தாராளமாக எனது நிறுவனத்தில் வேலை பார்கிறார்கள் என்று கூறி இருக்கலாம்.அதுவும் முத்தம் கொடுக்கும் அளவிற்கு போன பின்பு.





அடுத்து தனது அப்பா புற்றுநோயால் இறக்க போகிறார் என்று தெரிந்து வெளியே வந்து நின்றுகொண்டு வினயிடம் பேசும் இடத்தில நடிப்பே வரவில்லை.

மற்றும் இறுதிக்காட்சியில் இப்படி ஒரு மொக்கையாக I Love You சொல்லி  நான் எந்தப்படத்திலும் பார்த்ததில்லை ,அதிலும் கொடுமை அந்த மொக்கை லவ் யூ வை கேட்டு திரிஷா மயங்குவது.

இறுதியாக நம்ம அபினவ் வை வழக்கம் போல தியாக செம்மலாக பயன்படுத்தியது.அதுதான்பா ஹீரோயின் ஹீரோவை காதலிப்பது தெரிந்தும் அவரை காதலிப்பது ஹீரோ ஹீரோயினிர்க்கு இடையில் சண்டை வரும்பொழுது வந்து அவளை கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்வது இறுதியில் மீண்டும் அவர்கள் சேரும் பொழுது விட்டுக்கொடுத்துவிடுவது.

இதனை தவிர்த்திருக்கலாம்.மொத்தத்தில் படம் கண்டிப்பாக பார்க்கலாம் நன்றாக இருக்கிறது.

பிரியாணி :




கதை :


நாம் பல திரைப்படங்களில் பார்த்த கரு தான்.இரவில் மப்பாகி காலையில் எழும் பொழுது இரவில் நடந்தது எதுவும் தெரியாமல் ஒரு பெரிய பிரச்னையில் மாட்டிக்கொள்வது.பின் அதில் இருந்து தப்பிப்பது. படத்தில் ஒரு காட்சியில் பிரேம்ஜி ஹாங்கோவர் படத்தை கிண்டல் செய்வார். இப்படத்தின் கருவும் அத்திரைப்படங்களில் இருந்து எடுத்ததே.

கார்த்திக்கும் பிரேம்ஜியும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். பிரேம்ஜி ஆசைபடும் பெண்கள் அனைவரையும் தனக்கு கணக்கு செய்து கொள்ளும் அளவிற்கு இருவரும் மிக நண்பர்கள்.

கார்த்தியின் காதலி ஹன்ஷிகா திரைப்படங்களின் வழக்கமான காதலி, ஹீரோ செய்யும் தவறுகளை எல்லாம் மன்னித்து அவரையே காதல் செய்யும் காதலி.

இனி வரும் காலங்களிலாவது ஹீரோயின் ப்ளே கேர்ள் ஆகவும் அவளை மட்டுமே காதலிக்கும் ஹீரோவும் இருக்குமாறு ஒரு படம் வேண்டும்.அப்பொழுதுதான் நம்ம நாடு வல்லரசு ஆகும்.



நண்பர்கள் இருவரும் மகிந்திரா ட்ராக்டர்கள் ஷோரூமில் வேலை செய்கிறார்கள்.அதன் மேனேஜர் சுப்புவிற்கு தனது அக்காவை கல்யாணம் செய்து கொடுக்க கார்த்தி முடிவு செய்கிறார்.அக்கா கதாபாத்திரத்தில் நம்ம மதுமிதா (அதற்குள்ளாகவே அக்கா கதாபத்திரத்தில் நடிக்க வந்துவிட்டார் பாவம்).

அவர்களின் புது ஷோரூம் ஆம்பூரில் திறக்க முடிவுசெய்கிறார்கள். அதனை திறந்து வைக்க பிரபல தொழிலதிபர் நாசரை கூப்பிடுகிறார்கள். அவரது மருமகன் நம்ம ராம்கி. அவர்களது குடும்ப நண்பர் ஜெயப்ரகாஷ் Asst கமிஷ்னர்.

ராம்கிக்கு தனது மாமா நாசரின் இடத்திற்கு வர ஆசை. நமக்கும் பார்த்தவுடன் இவர் தான் வில்லனாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இதன் திறப்புவிழாவிற்கு வரும்பொழுது நண்பர்கள் இருவரும் தப்பி செல்லும் காதல் ஜோடியை தடுத்து பெண்ணை காப்பாற்றுகிறார்கள்.

திறப்புவிழாவில் கார்த்தியின் பேச்சு நாசருக்கு பிடித்துவிடுகிறது. அவருக்கு தனது இரண்டாவது பெண்ணை கொடுக்கும் அளவிற்கு நாசர் முடிவுசெய்கிறார். இது ராம்கிக்கு பிடிக்கவில்லை.

திறப்புவிழா முடிந்து நண்பர்கள் இருவரும் சென்னை திரும்பும்வழியில் பிரியாணி சாப்பிட ஒருகடையில் நிறுத்துகிறார்கள்.அங்கு வரும் Mandy Takharஐ பார்கிறார்கள்.




அவள் இவர்களை தனது ஹோட்டலிற்கு கூப்பிட்டு வந்து தண்ணி கொடுத்து ஒரு ஆட்டம் போட்டு காண்பிக்கிறார். அப்பொழுது அங்கு நாசர் வருகிறார். அத்துடன் நண்பர்கள் மப்பில் மயக்கம் அடைகிறார்கள்.



காலையில் எழுந்ததும் தான் நாசர் காணாமல் போக இவர்களை போலீஸ் தேடுவது தெரிகிறது. இதற்கிடையில் நாசரை ஒரு குற்றவிசாரணைக்கு கைது செய்ய வரும் சிபிஐ அதிகாரியாக சம்பத்.

இப்படியாக ஜெயப்ரகாஷ் போலீஸ் கூட்டம் ஒருப்பக்கமும் சம்பத் மூலம் அவரது நண்பர் பிரேம் போலீஸ் கூட்டம் ஒரு பக்கமும் அவர்களை துரத்துகிறது.

கடைசியில் எப்படி தப்பித்து உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள் எனபது மீதிக்கதை.

எனக்கு பிடித்தது :


ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்தின் வெற்றி அதன் இறுதிக்காட்சி திருப்புமுனையில் தான் இருக்கிறது, அந்த வகையில் இப்படம் வெகுவாக ஸ்கோர் செய்கிறது. அவ்வகையான காட்சி வைப்பதில் வெங்கட் திறமைசாலிதான்.

ஒரு ப்ளே பாய் கதையாக இருந்தாலும்  Mandy Takhar வரும் காட்சி தவிர வேறு காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.

கண்டிப்பாக வெங்கட்டின் திரைக்கதை. எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காமல் கொண்டு செல்கிறார்.

நகைச்சுவை காட்சிகள் பரவாயில்லை, ஓரளவு சிரிப்பை வரவழைக்கின்றன.

உமா ரியாஸின் சிறு கதாபாத்திரத்தில் நன்றாக இருக்கிறது. அவருக்கு பல சண்டை காட்சிகள், பாவம் நம்ம சாம் ஆண்டெர்சனுக்கு தான் சண்டை காட்சி இல்லை.

வெங்கட்டின் மற்றொரு பிளஸ் அவரது சென்னை 28 டீமை நன்றாக பயன்படுத்துவது. இதிலும் தலை பெயரை சரியான இடத்தில் அவர்களை வைத்து பயன்படுத்தி இருப்பார்.

இறுதியில் பெயர்போடும் சமயத்திலும் நம்மை உட்கார வைக்கும் வெங்கட்டின் கட் சாட்டுகள் அருமை.

பிடிக்காதது :


யுவனின் இசை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.அதுவும் 100வது படம்.Better Luck Next  Time யுவன்.

இறுதிக்காட்சியில் வரும் நீண்ட சண்டை காட்சிகள், கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

அதிகமான லாஜிக் மீறல்கள்,24 மணிநேரமும் ரெகார்ட் செய்யும் CCTV யில் பிரேம் delete செய்த பதிவுகளை தேடாதது.பல நாள் பிரேதமாக இருந்த நாசரை இறுதியில் தான் இறந்ததாக போலீஸ் நம்புவது.

கார்த்தி கொஞ்சம் டான்ஸ் ஆட கற்றுக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்த கார்த்திக்கு கிடைத்த சிறு வெற்றி.

கார்த்தி எல்லா படங்களிலும் ஒரே மாதிரி வருவது சற்றே போர் அடிக்கிறது.கொஞ்சம் எதாவது வித்தியாசமாக முயர்சி செய்யலாம்.

இரண்டு படங்களுமே வெவ்வேறு வகையை சேர்ந்தது, இரண்டுமே நன்றாக இருக்கிறது. நண்பர்கள் தையிரியமாக சென்று பார்க்கலாம்.

அவ்வளவு தான் நண்பர்களே. மீண்டும் சந்திப்போம்.

கிருஷ்ணா வ வெ.

5 comments:

  1. ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு , அதுவும் டபுள் விமர்சனம்...சூப்பர் கிருஷ்ணா.....
    நான் என்றென்றும் புன்னகை பார்த்திட்டேன், ஒரே ஷோ தான் போட்டாங்க, அதையும் விடாம பார்த்திட்டோம்....பிரஸ்ட் ஆப் நல்லா கலகலப்பா போச்சு....இரண்டாம் பாதி ரொம்பவே இழுவை...பாடல்கள் பொறுமையை ரொம்பவே சோதிச்சது. கிளைமாக்ஸ் நல்லா பண்ணி இருக்கலாம்...டக்ன்னு முடிஞ்ச மாதிரி இருந்தது...நீங்களும் அதையே சொல்லி இருக்கீங்க..

    என்னோட விமர்சனத்தை நம்பி பிரியாணி போனதுக்கு மிக்க நன்றி...அதுவும் உங்களை ஏமாற்றவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி.....உங்க பார்வை தான் என்னுடையதும்...
    சின்ன Typo..
    //அவரது சென்னை 68// அது சென்னை -28... :-)

    தொடர்ந்து எழுதுங்க....ஹாப்பி Blogging... !!!!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா 28 க்கு பதில் எனது அட்ரஸில் வரும் பின் கோட் போட்டுவிட்டேன்.

      Delete
  2. நல்ல விமர்ச்சனம் கிருஷணா! நானும் இந்த இரு படங்களையுமே பார்த்துவிட்டேன். ஆச்சர்யம்! கிட்டத்தட்ட நான் இப்படங்களைப்பற்றி என்ன நினைத்தேனோ, உங்கள் கருத்தும் அப்படியே இருக்கிறது.
    'என்றென்றும் புன்னகை'யில் அந்த க்ளைமாக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை. உயிருக்குப் போராடும் தந்தையின் முன் காதலர்கள் மோதிரம் மாற்றிக்கொண்டு சிரித்து மகிழ்வதெல்லாம் கடுப்பைக் கிளப்பும் காட்சிகள். காதலர்கள் பிரிவதற்கான காரணமும் (நீங்கள் சொல்லியதைப் போலவே) ஸ்டாராங்காக இல்லை.

    பிரியாணி - ஏமாற்றவில்லை. எனினும், ராஜேஷ்குமார் அல்லது சுபாவின் நாவல் ஒன்றை படித்த மாதிரிதான் இருந்தது. க்ளைமாக்ஸில், நாசரின் பல நாள் பிரேதத்தைச் 'சுடச்சுட' காட்டுவதெல்லாம் முழநீளப் பூச்சுற்றல்கள். அந்த 'நாசரைப் போன்ற மாஸ்க்' நாடகமும் அப்படியே!

    ReplyDelete
  3. வாங்க விஜய், உங்கள் ஆசை படி கொஞ்சம் பெரிய பதிவாக போட்ருக்கேன் என்று நினைகிறேன்.

    //சிரித்து மகிழ்வதெல்லாம் கடுப்பைக் கிளப்பும் காட்சிகள்// , //முழநீளப் பூச்சுற்றல்கள்//

    கண்டிப்பா..என்றென்றும் புன்னகை முதல் பாதி ஓகே. பிரியாணி இரண்டாம் பாதி ஓகே.

    ReplyDelete
    Replies
    1. //ராஜேஷ்குமார் அல்லது சுபாவின் நாவல் ஒன்றை படித்த மாதிரிதான் இருந்தது//

      நம்ம சுபாவின் செல்வா கதைகளில் எல்லாம் அப்படிதான் ஒரு குஜிலி கொலையாகும்,
      அந்த பலி செல்வா மேல் விழும் அவர் தப்பிப்பது தான் கதை

      இங்கே குஜிலி கு பதில் நாசர்..அவ்வளவே.

      Delete