Wednesday, September 26, 2012

Malarmani Comics - காலகண்டன் கொலைவழக்கு




வணக்கம் நண்பர்களே,

இந்த பதிவில் நாம் பார்க்க போவது 1986 இல் வந்த மலர்மணி  காமிக்ஸின் காலகண்டன் கொலைவழக்கு பற்றியதே.
இதனை வெளியிட்டோர் மதுரையில் இருந்த கலைபொன்னி பதிப்பகத்தார்.ஆசிரியர் கே.பாண்டிமணி.
இதற்கு கதை மற்றும் சித்திரங்கள் ஸ்ரீகாந்த்.

கலை பொன்னி பதிப்பகத்தார் பல பெயர்களில் காமிக்ஸ் வெளியிட்டனர்.அவை மலர் காமிக்ஸ்,கலைபொன்னி காமிக்ஸ்,பொன்னி காமிக்ஸ்,மலர் மணி காமிக்ஸ் இப்படி பல.

அதனை பற்றிய தொகுப்பை பற்றி பார்க்க எனது முந்தய பதிவை பார்காதவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.
அவர்கள் மாயாஜால கதை கூட வெளியிட்டுள்ளார்கள் அதனை பற்றி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மற்றும் இவர்கள் பற்றி நண்பர் சிவ் அவர்கள் ஒரு பதிவிட்டுள்ளதை அறிந்தேன் அதனை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

லயன் குழுமத்தினரின் படைப்புகள் தரத்தில் உயர்ந்ததாக இருந்தாலும் இவர்களது சில படைப்புகளும் நன்றாக இருக்கும்.குறிப்பாக ஸ்ரீகாந்த் அவர்கள் சித்திரங்கள் வரைந்த கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதிலும் குறிப்பாக இந்த கதை.

நண்பர்களே இந்த கதையை படித்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள் அதனை பொறுத்து மேலும் அவர்களது படைப்புகளில் எனக்கு பிடித்தவைகளை நான் பதிவு செய்யலாமா வேண்டாமா என நான் முடிவு செய்துகொள்வேன்.
ஆகையால் கண்டிப்பாக நண்பர்கள் அனைவரும் தங்களது கருத்தை கூறுங்கள்.

கதை ;
நமது ஹீரோ கோபி என்கிற கோபாலகிருஷ்ணன்.
அவர் முதலில் பத்திரிகை நிருபராக இருந்து பின்னர் துப்பறிவாளராக மாறியவர்.ஒரு நாள் அவர் பொழுது போகாமல் பழைய பத்திரிகை தொகுப்புகளை படித்துக்கொண்டு இருந்தார்.அதில் 5 வருடங்களுக்கு முன்பு நடந்த பிரபல கோடீஸ்வரர் காலகண்டன் கொலைவழக்கை பற்றி படித்தார்.
அதில் காலகண்டன் அவரது டிரைவர் கோவிந்தனால் கத்தியால் குத்தப்பட்டார் என்றும் குத்தப்பட்ட கத்தியில் கோவிந்தனின் கைரேகை இருந்ததையும்  இன்னும் கொலையாளி கிடைக்கவில்லை என்றும் படித்தார்.மற்றும் அவரது தம்பி மேகநாதன் விரைவில் வழக்கை முடிக்க செய்துள்ளார் என்றும் அறிந்தார்.காலகண்டன் தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிக்க கூறியுள்ளார்.ஆகையால் அவரது உடல் இப்பொழுது மருத்துவ கல்லூரியில் உள்ளதை அறிந்து கொண்டார்.


அவருக்கு அந்த வழக்கின் மீது ஆர்வம் வந்து அந்த கொலையாளியை பிடிக்க முடிவு செய்தார்.பின்னர் அதுபற்றி  டி ஐ ஜி  ராஜேந்தரிடம் கூறுகிறார்.அவரும் அந்த வழக்கை பற்றிய விவரங்கள் கொடுத்து அவரை அந்த வழக்கை பற்றி ஆராய சொல்கிறார்.அவரிடம் இந்த வழக்கு பணக்காரர்கள் சம்பத்தப்பட்டது என எச்சரிக்கை செய்கிறார்.

முதலில் கோபி டிரைவர் கோவிந்தன் வீட்டிற்க்கு சென்று அவரது மனைவி பார்வதியை சந்திக்கிறார்.அவர் மிகவும் வறுமையில் இருப்பதை  காண்கிறார்.அவர் தனது கணவர் மது அருந்தினாலும் சிறு எறும்புக்கு கூட தீங்கு செய்ய மாட்டார் என்றும் அவர் இந்த கொலை செய்திருக்க மாட்டார் என்றும் கூறுகிறார்.பின் அங்கு இருந்து கிளம்பும் போது அந்த டிரைவர் வளர்த்த நாய் ஜானை வாசலில் பார்த்தார்.

அடுத்து அவர் கோடீஸ்வரர் மேகநாதனை சந்தித்து தான் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்யபோவதாக கூறுகிறார்.அதனை கேட்ட அவர் மிகவும் கோவமுடன் கோபியை விரட்டிவிடுகிறார்.கோபி அவர் பேசியதை தனது ரெகார்டரில் பதிவு செய்து கொள்கிறார்.பின்னர் டி ஐ ஜி ராஜேந்தரை சந்தித்து விவரம் கூறுகிறார்.பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்க்கு வந்தது இதுவரை நடந்ததையும்  இனி தான் செய்ய வேண்டியதையும் பட்டியலிட்டார்,பின்னர் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டார்.ஆனால் அவருக்கு அதிர்ச்சி அவரது ப்ரேக் வேலை செய்யவில்லை மற்றும் பெட்ரோல் வாசனை வேறு வந்தது.மறுவினாடி துணிச்சலுடன் காரிலிந்து வெளியில் பாய்ந்து தப்பினார்.கார் ஒரு பாறையில் மோதி தீ பற்றி எரிந்தது.

அன்று மாலை மேகநாதன் வளர்ந்த ஊட்டிக்கு அவர் பற்றி விவரம்  சேகரிக்க சென்றார்.அங்கு அவரது நண்பர் கபூரை உதவிக்கு அழைத்தார்.இருவரும் மேகநாதனை பற்றி அனைத்து விவரங்களும் சேகரித்தனர்.அதில் இருந்து மேகநாதன் ஒரு சாதுவானவர் எந்த வம்பிற்கும் போகமாட்டார்.அவரது மனைவி சங்கரி ஒரு அடங்காபிடாரி மற்றும் அவள் தான் இங்கு இருக்கும் எஸ்டேடை நிர்வாகம் செய்துவருகிறாள் என்று அறிந்து கொள்கின்றனர்.

இவர்கள் மேகநாதன் பற்றி விசாரிப்பதையும் அவர்கள் அவளை சந்திக்க வந்துகொண்டு இருப்பதையும் சங்கரியிடம் கூறுகிறான் அவளது அடியாள் கொந்தளிக்கும் சங்கரி அவர்கள் இருவரையும் வழியிலேயே தீர்த்துக்கட்ட சொல்கிறாள்.அடி ஆட்களும் காரில் வந்து கொண்டு இருந்த இருவரையும் ஆயுதங்களுடன் சென்று மடக்குகின்றனர்.ஆனால் கோபியும் கபூரும் அவர்கள் அனைவரையும் அடித்து விரட்டிவிட்டு சங்கரியை சென்று சந்திகின்றனர்.
அவர்களிடம் அவள் அது முடிந்தகதை நீங்கள் போகலாம் என விரட்டிவிடுகிறாள்.கிளம்பும் போது கபூர் ஏன் சங்கரி பொட்டு  வைத்துகொள்ளவில்லை என்ற சந்தேகத்தை கிளப்புகிறார்.அதற்கு கோபி அது ஏதாவது பேஷனாக இருக்கும் என்று கூறுகிறார்.  





அடுத்து கோபி கபூரிடம் விடை பெற்றுக்கொண்டு ஊர் திரும்புகிறார்.கபூரும் தான் மேலும் ஏதாவது விவரம் அறிந்தால் தெரியபடுவதாக கூறுகிறார்.ஊர் திரும்பிய கோபி ராஜேந்தரை சந்தித்து நடந்ததை கூறினார்.அந்த வழக்கை மறுவிசாரணைக்கு கொண்டுவரவேண்டும் என கோபி கூறுகிறார்.அதற்கு ராஜேந்தர் அரசு வழக்கறிஞர்  சிவகுமாரை சந்திக்க சொல்கிறார்.கோபி சென்று அவரை சந்தித்து விவரங்களை கூறுகிறார்.சிவகுமாரும் சம்பதமானவர்களுக்கு சம்மன் அனுப்புவதாக கூறுகிறார்..

அன்று இரவு கோபி யாருக்கும் தெரியாமல் மேகநாதன் வீட்டிற்க்கு சென்று ஒரு கதவின் பின்னால் மைக்ரோ போன் ஒன்றை பொருத்துகிறார்.பின் அவர் வெளியேவரும்போது டிரைவர் கோவிந்தனின் நாய் ஜானி அந்த வீட்டிற்க்குள் ஓடுவதை பார்த்தார்.அதனை பின்தொடர்ந்த கோபி அந்த நாய் அந்த வீட்டின் பின்புறம் சென்று ஒரு இடத்தை தோண்ட முயற்சி செய்ததையும் பின் முடியாமல் அங்கே படுத்துவிட்டதையும் காண்கிறார்.பின் அடுத்தநாள் இரவில் நம்பிகையான இருவருடன் அந்த வீட்டிக்கு வந்து அந்த இடத்தை தோண்டினார்.அங்கு ஒரு எலும்புக்கூடு கிடைத்தது.
அதனை ஆராய்ச்சிகூடத்திர்க்கு அனுப்பினார்.அதனை ஆராய்ந்த நிபுணர் ஜேம்ஸ் அது டிரைவர் கோவிந்தனின் உருவ அமைப்போடு ஒத்துப்போவதாக கூறினார்.




அடுத்தநாள் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அரசு வழக்கறிஞர் சிவகுமார் காலகண்டன் மற்றும் டிரைவர் கோவிந்தனை கொலை செய்ததாக மேகநாதன் மேல் குற்றம் சுமத்தினார்.அதனை அவர் மறுத்தார்.எதிர் தரப்பு வக்கீல் ராஜசேகரன் ஆதாரம் கேட்டார்.அதற்கு சிவகுமார் ஒரு டேப் ரெகார்டரை போடுவதற்கு அனுமதி கேட்டார்.நீதிபதி அனுமதி வழங்கியதும் டேப் ஓடத்துவங்கியது அது கோபி மேகநாதன் வீட்டில் கோபி பொருத்திய மைக்கில் இருந்து பதிவு செய்யப்பட்டது.அதில் மேகநாதன் ஒரு அடி ஆளிடம் பேசுவது பதிவு செய்யபட்டிருந்தது.

மேகநாதன் : ஏண்டா அந்த பயலை தீர்த்துக்கட்ட சொன்னால் அவன் உயிரோடு தான் இருக்கிறான் நேற்று சங்கரியை வேறு சென்று மிரட்டிஉள்ளான் போதாகுறைக்கு கோர்ட் சம்மன் வேறு வந்துள்ளது 

அடியாள்  : கவலை படாதீர்கள் எஜமான் அவனை தீர்த்துவிடுகிறேன்.

என்று பதிவாகிருந்தது.அதனை கேட்ட மேகநாதன் முகத்தில் கோவம் தெரிந்தது.பின்னர் ராஜசேகரன் காதில் ஏதோ கூறினார்.பின்னர் கோர்ட் மதிய உணவுவேளைக்காக கலைந்தது.மீண்டும் கூடியபோது ராஜசேகரன் அந்த டேப்பில் பதிவாகிருந்தது பல வருடங்களுக்கு முன்னால் மேகநாதன் செய்த நாடக ஒத்திகை என்றும் காலகண்டன் மற்றும் மேகநாதன் இருவரும் நாடக நடிகர்கள் என்றும் கூறினார்.இதனால் வழக்கு ஒத்திவைக்கபட்டது.



அன்று இரவு கபூர் மிக முக்கிய தகவலுடன் கோபியை சந்தித்தார்.அது மேகநாதன் ஒரு நடிகர் மட்டும் அல்ல ஒரு கார் பந்தய ஓட்டுனரும் கூட.ஒரு முறை ஒரு கார் விபத்தில் அவரது இடுப்பு எலும்பு சேதம் ஆனதால் தகிடு வைத்துள்ளதாகவும் ஒரு 10 நிமிடத்திற்கு மேல் அவரால் ஒரு இடத்தில நிற்க முடியாது என்று கூறினார்.அதனை கேட்ட கோபி அதிர்ச்சி அடைந்தார் கோர்டில் மேகநாதன் பலமணிநேரம் ஒரே இடத்தில எப்படி நின்றார் என யோசித்தார்.உடனே நண்பர்கள் இருவரும் மருத்துவ கல்லூரியில் இருக்கும் காலகண்டனின் எலும்புக்கூடை பார்க்க சென்றனர்.

இதற்கிடையில் மேகநாதனை சந்தித்த சந்தித்த சங்கரி மருத்துவ கல்லூரியில் இருக்கும் காலகண்டனின் எலும்புகூடை கொண்டுவர சொல்லி மேகநாதனிடம் கூறுகிறாள்.மேகநாதனும் ஆட்களை அனுப்புகிறார்.



கோபியும் கபூரும் கல்லூரியை அடைந்து உள்ளே சென்று எலும்புக்கூடை ஆராய்கின்றனர்.அதன் இடுப்பில் ஒரு தகிடு இருப்பதாய் கண்டுபிடிக்கின்றனர்.கபூர் தன்னிடம் இருந்த கேமராவில் பல கோணங்களில் அதனை படம் பிடிக்கிறார்.பின்னர் வெளியில் வரும்போது மேகநாதனின் ஆட்களிடம் மோதி அவர்களை அடித்து போலீசிடம் ஒப்படைத்துவிட்டு  செல்கின்றனர்.

அடுத்தநாள் கோர்டில் சிவகுமார் மேகநாதனையும் டிரைவர் கோவிந்தனையும் கொலை செய்தது இங்கு இருக்கும் காலகண்டன் அவர்கள் தான் என குற்றம் சுமத்துகிறார்.கோர்டில் இருந்த அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி ஆகின்றனர்.பின்னர் சிவகுமார் கபூர் எடுத்த வந்த புகைப்படங்களை காண்பித்து விளக்குகிறார்.மற்றும் காலகண்டன் பெயருக்கு தான் கோடீஸ்வராக இருந்தாலும் அவர்க்கு பல கடன்கள் இருந்ததாகவும் அதனில் இருந்து வெளிவர இந்த நாடகம் என்றும் கூறினார்.மற்றும் இதற்கு மேகநாதனின் மனைவி சங்கரியும் உடந்தை என்றும் கூறுகிறார்.அனைத்தையும் கேட்ட நீதிபதி காலகண்டன் மற்றும் சங்கரிக்கு தண்டனை வழங்கினார்.அதனை கேட்ட நண்பர்கள் இருவரும் யாரும் அறியாமல் அங்கிருந்து வெளியேறினர்.ஆனால் அதனை கண்ட டி ஐ ஜி  ராஜேந்தர் வெளியில் வந்து இருவரையும் பாராட்டினார்.



அத்துடன் கதை முடிந்தது. 

இந்த கதையை  நான் படித்த பொழுது ஒரு சஸ்பென்ஸ் திரைப்படம் பார்த்தது போல இருந்தது.மற்றும் இக்கதையில் வரும் பெயர்கள் மற்றும் இடங்கள் நமக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது.

இக்கதையை நண்பர்கள் படித்திருந்தாலும் அதனை பற்றியும் கூறுங்கள் 

அவ்வளவுதான் நண்பர்களே.முன்பே கூறியது போல உங்கள் கருத்தை கூறுங்கள்.மற்றும் பதிவின் நீளம் குறித்தும் கூறுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.
கிருஷ்ணா வ வெ.

36 comments:

  1. நண்பா நான்தான் முதலில். படித்து விட்டு வருகிறேன் :-)

    ReplyDelete
  2. பதிவு நன்றாக இருந்தது நண்பா. சிறுவயதில் படித்த நினைவு. மீண்டும் படித்த உணர்வு.

    பதிவில் நான் படித்த வரை எழுத்துபிழைகள் ஏதும் தெரியவில்லை நண்பா. உங்களின் அக்கறை புரிகிறது. நல்ல முன்னேற்றம். பதிவின் நீளம் பற்றி கூற வேண்டுமானால் நீங்கள் ஆரம்பத்தில் எனக்கு கூறியதுதான், கதையை முழுமையாக விளக்க நீளம் பற்றி கவலைப் பட வேண்டாம்.

    முழுமையாக நீங்கள் கதையைக் கூறும் பொழுதுதான் மற்றவர்களுக்கும் அந்தக் கதையை முழுமையாக படித்த உணர்வும், புத்தகம் தங்களிடம் இல்லாத குறை நீங்கி ஒரு சந்தோசம் பிறக்கும்.

    பதிவை வந்து பார்க்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்: முழு கதையும் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. குறைந்தது 5 முதல் 6 மணி நேரம் செலவழித்தால் மட்டுமே முழு கதையும் எழுதி ஸ்கேன்களை இணைத்து பதிவை முழுமையாக உங்களுக்கு நண்பரால் வழங்க முடியும். எனவே பதிவை பார்ப்பவர்கள் மற்றும் படிப்பவர்கள் கண்டிப்பாக பின்னூட்டம் மூலம் நண்பரை உற்சாகப் படுத்துங்கள். நாம் இடும் பின்னூட்டமே அவரை அடுத்த பதிவிற்கு நேரம் ஒதுக்க தூண்டும்.

    அருமையான உழைப்பு நண்பா. அடுத்த பதிவை (உங்களுக்கு பிடித்த) சீக்கிரமே இட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. //கண்டிப்பாக பின்னூட்டம் மூலம் நண்பரை உற்சாகப் படுத்துங்கள்.//

      முற்றிலும் உண்மை நண்பா.நம்மை போல பதிவர்களை உற்சாகபடுதுவது இடப்படும் பின்னுட்டங்கள் தான்.

      Delete
    2. //முழு கதையும் சொல்வது சாதாரண விஷயம் அல்ல// very true

      Delete
  3. உண்மையை சொல்வதானால் மலர் மணி, பொன்னி வகையறா காமிக்ஸுகள் சிறு வயதிலேயே சற்றும் பிடிக்காது. இருந்தாலும் உங்களின் உழைப்புக்கு வாழ்த்துக்கள் :)

    முழுக்கதையை பதிவிடுவது எவ்வளவு தலைவலி பிடித்த வேலை என்பதை சமீபத்தில் உணர்ந்தேன்! ;)

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணத்தில் இணைந்ததிற்கு வாழ்த்துக்கள் - ஓட்டு போட்டாச் ;)

      Delete
    2. //மலர் மணி, பொன்னி வகையறா காமிக்ஸுகள் சிறு வயதிலேயே சற்றும் பிடிக்காது//

      மலர் மணி, பொன்னி காமிக்ஸ்களின் தரம் குறைவே.
      ஆனால் நான் கூறியது போல சில கதைகள் நன்றாக இருக்கும்.
      அக்கதைகளையே நான் பதிவிடுகிறேன்.

      முன்பு பிடிக்காமல் படிக்காவிட்டாலும் எனது பதிவிலாவது படித்துவிட்டு கதையை பற்றிய உங்கள் கருத்தை கூறுங்கள் கார்த்திக்.மற்றும் உங்களது கருத்துப்படி நான் மலர் மணி, பொன்னி காமிக்ஸ்கள் பற்றிய பதிவுகளை தொடரலாம வேண்டாமா என்றும் கூறுங்கள்.

      Delete
    3. உங்களுக்காக பொறுமையாக படித்தேன் :) இருந்தாலும், பிடித்திருக்கிறது என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன் - தவறாக நினைக்க வேண்டாம்! :)

      லயன் / முத்துவில் வந்த / வரும் பல மொக்கை கதைகளையும் பலர் சகித்துக் கொள்வதற்கு காரணம் அவற்றின் சித்திரங்களே. இங்கேயோ இரண்டுமே சுமார் எனும் போது அதில் கொஞ்சமும் மனம் லயிப்பதில்லை. இருந்தாலும், நண்பர்களின் பார்வைகள் வேறுபடும் - எனவே பொன்னி & கோ காமிக்ஸ் பதிவுகளை தொடர்வதும் தொடராததும் முற்றிலும் உங்கள் விருப்பத்தை சார்ந்தது! :)

      Delete
    4. எனது வேண்டுகோளிற்கு இணங்கி படித்து கருத்துகூரியதர்க்கு நன்றி.

      Delete
  4. ஒரு அக்மார்க் தமிழ் கதை. கதையும் அருமை! கதைசொன்ன விதத்தில் கிருஷ்ணாவின் பதிவும் அருமை!

    சிறுவயதில் பொன்னி காமிக்ஸ் நிறைய படித்திருக்கிறேன். எனினும் இந்தக் கதையை படித்ததாய் ஞாபகம் இல்லை. பொதுவாக இக்காமிக்ஸ்களின் சித்திரங்களில் நிறைய ஃபிரேம்கள் பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளை எப்போதும் தூக்கலாகவே காட்டுவதாய் இருக்கும். சண்டைக் காட்சிகளில்கூட கை, கால்களெல்லாம் அசாதரணமாக எங்கெங்கோ நீட்டிக்கொண்டிருக்கும். ஆனால், சித்திரத் தரத்தில் சில குறைகள் இருந்தாலும்கூட முழுக்கவே இது தமிழ்படைப்பு என்ற வகையில் பெருமைப்படுவதோடு படைப்பாளிகளுக்கு தாராளமாக சபாஷ் சொல்லலாம்.

    அவ்வப்போது இதுபோன்ற கதைகளைப் பதிவிடுவதும் தமிழ் படைப்பாளிகளுக்கு பெருமை சேர்க்கும் என்பதால் நண்பர் கிருஷ்ணாவுக்கு பச்சைக்கொடி காட்டலாம்.

    பின்குறிப்பு : பதிவில் 'பொட்டு' என்பது 'போட்டு' என்றிருக்கிறது. படிப்பவர்களைக் குழப்பக்கூடும்.


    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பரே அவ்வபொழுது இது போல சில கதைகளையும் பதிவிடலாம் என்று இருக்கிறேன்.


      // பதிவில் 'பொட்டு' என்பது 'போட்டு' என்றிருக்கிறது//

      பதிவிலும் மாற்றிவிட்டேன்.


      நான் பதிவில் கூறியது போல கதையின் தரம் ஓரளவு இருக்கும்.கண்டிப்பாக நமது லயன் குழுமத்துடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது.ஆனால் சிறு வயதில் இதில் வந்த சில கதைகளையும் நான் ரசித்திருக்கிறேன் என்பதே உண்மை.

      Delete
  5. nanum சிறு வயதில் பொன்னி காமிக்ஸ் படித்து உள்ளேன் .ஆனால் சித்திர தரம் lion காமிக்ஸ் பார்க்கும் முன்னர் ரசிதது படித்தேஎன் .பின்னர ் விட்டுவிட்டேன் .இப்போது உங்கள் பதிவை பார்த்த பின் படிக்க தூண்டுகிறது..நண்பா

    ReplyDelete
  6. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று மீண்டும் நெட்டில் நுழைகிறேன்.

    பதிவை பற்றிய கருத்து: பதிவு சூப்பராக வந்திருக்கின்றது. நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பதிவுகளில் மெருகு கூடி வருகிறது. இந்த பதிவு, இதற்கு முந்தய பதிவுகளை விட வித்யாசமாக இருக்கின்றது. இந்த பதிவை அவசரமில்லாமல், நிதானமாக உருவாக்கியிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். கீப் இட் அப்.

    பதிவின் கருத்தைப் பற்றிய கருத்து: பெங்களூர் கார்த்திக்கின் உணர்வே என்னுடையதும். பெங்களூர் கார்த்திக் அவரது எண்ணத்தை மேலே கூறி விட்டதல், என் கருத்தை தெரிவிக்க இருந்த தயக்கத் தடையை தாண்டுவதற்கு எளிதாக இருக்கின்றது.

    சிறுவயதிலிருந்தே இந்திய காமிக்ஸ்கள் மேல் எனக்கு ஈடுபாடு கிடையாது. புத்தக கடையில் இருக்கும் புத்தக அட்டையை பார்த்தவுடன், லேசாக பிரித்து உள்ளிருக்கும் படங்களின் தரத்தை சற்று புரட்டி பார்வையிட்டவுடன், அந்த புத்தத்தின் தரம் தெரிந்துவிடும். இது போன்ற காமிக்ஸ்களை பெரும்பாலும் வாங்கியதில்லை. இன்னும் சற்று மேலே சொல்ல வேண்டும் என்றால் அந்த நாட்களில், இது போன்ற லோக்கல் காமிக்ஸை ப்ரீயாக கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லும் மனப்பான்மையே மேலோங்கி இருந்தது. இப்படி சொல்வதால் என்னை நண்பர்கள் தவறாக நினைக்கக் கூடாது.

    இது போன்ற காமிக்ஸ்களை படிப்பதற்கு முன்பே முத்துவையும், இந்திரஜாலையும் படித்ததினால் உருவான ரசனையால், தரமற்ற காமிக்ஸ் புத்தகங்களின் மேல் ஒரு அவர்ஷன் ஏற்பட்டுவிட்டது.

    ஏமாற்றங்களை தந்த கதைகள் முத்துவிலும், லயனிலும், இந்திரஜாலிலும், ராணி காமிக்ஸிலும் வந்ததை நான் மறக்கவில்லை.
    உ.ம்.: இரும்பு மனிதன் ஆர்ச்சி, ஸபைடர் போன்ற கதைகள் முத்து லயனிலும், பஹதுர், புரூஸ் லீ போன்ற கேரக்டர்கள் இந்திரஜாலிலும் வெளிவந்தது.

    அனைத்து லோக்கல் காமிக்ஸ்களையும் நான் வெறுத்ததில்லை. அனில், பலே பாலு, கபீஷ், என்று இன்னும் பல இந்திய காமிக்ஸ் கேரக்டர்களை விரும்பி ரசித்திருக்கின்றேன் என்பதையும், அம்புலிமாமாவை இன்றும் விருப்பத்துடன் படிப்பேன் என்பதையும், இந்த சந்தர்ப்பத்தில் சொல்லிவிடுகின்றேன்.

    ReplyDelete
    Replies

    1. welcome back, Balaji sundar!

      காணாமல் போனவர்கள் பற்றிய நாளிதழ் அறிவிப்புக்காக நான் விபரங்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது, நல்லவேளையாக வந்துவிட்டீர்கள்!
      தினமும் ஒருமுறையாவது உங்கள் வலைப்பூவிற்குச் சென்று, பதிவேதும் இல்லாதது கண்டு ஏமாந்து திரும்பிய எண்ணற்வர்களில் நானும் ஒருவன்!

      Delete
    2. Vijay Erode: நல்லவேளை, காணவில்லை என்று போடாமல் போனீர்களே! தப்பித்தேன். தாமதத்திற்கு பொறுத்தருளவும். ஏகப்பட்ட இடஞ்சல்கள். மேலும் உங்கள் பாக்கெட்டிலும் ஓட்டை விழாமல் இருக்கும்.;-)

      கூடிய விரைவில் உங்கள் ஏமாற்றத்தை தீர்க்க முயற்சி செய்கிறேன்.

      Delete
  7. வெகு நாட்களுக்கு பிறகு வந்துள்ளீர்கள்.
    புது வேகத்துடன் உங்கள் பதிவுகளை எதிர் நோக்கிஉள்ளேன் நண்பரே.

    //ஏமாற்றங்களை தந்த கதைகள் முத்துவிலும், லயனிலும், இந்திரஜாலிலும், ராணி காமிக்ஸிலும் வந்ததை நான் மறக்கவில்லை. //

    அதே போல சில நல்ல கதைகளும் மற்ற காமிக்ஸ்களில் வந்துள்ளது நண்பரே.
    நான் அது போல சில கதைகளையே பதிவிட நினைக்கிறன்.


    அதே போல சில நல்ல கதைகளும் மற்ற காமிக்ஸ்களில் வந்துள்ளது நண்பரே.
    நான் அது போல சில கதைகளையே பதிவிட நினைக்கிறன்.
    எடுத்துக்காட்டு எனது முதல் பதிவில் இருக்கும் சிலந்தி மற்றும் ஒரு இரும்புக்கை மாயாவி மற்றும் சில.

    ReplyDelete
    Replies
    1. முத்து காமிக்ஸ் வெளிவந்த போது, முல்லை தங்கராசன் என்பவர் பதிப்பாசிரியராக இருந்தார். அவர் முத்துவில் இருந்து பிரிந்து உருவாக்கியதே பொன்னி காமிக்ஸ் என்று நினைக்கின்றேன். பொன்னி காமிக்ஸில் முதலில் வந்த சில புத்தகங்கள் ஒரளவிற்கு நன்றாக இருந்தது. பின் தரம் குறையத் துவங்கியது. முத்து காமிக்ஸின் விலைக்கே, லோக்கல் காமிக்ஸ்களும் விற்பனைக்கு வந்தது. அதனாலும் லோக்கல் காமிக்ஸ்களை வாங்கவில்லை.

      ஒரேயடியாக லோக்கல் காமிக்ஸ்களை புறக்கணித்ததால், அந்த கதைகளின் தன்மையை புரிந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இப்போது உங்களது பதிவுகளை பார்த்துத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

      Delete
    2. நண்பரே முல்லை தங்கராசன் பிரிந்து சென்று சேர்ந்தது மேகலா காமிக்ஸில்.
      அதில் வந்த ஜான் சில்வர் கதைகள் தரத்திலும் உயர்ந்தது.
      அதனை பற்றிய எனது முந்தய பதிவை பாருங்கள்.

      Delete
  8. முல்லை ......பொன்னி காமிக்ஸ்லா......? இருக்காது நண்பா...!காமிக்ஸ் ஒரு கனா காலமா "நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே BARANIWITHCOMICS .blogspot .com

    ReplyDelete
  9. மலர்மணி காமிக்ஸ் பற்றி எனக்கு அறிமுகம் இல்லை நண்பா...உங்கள் அறிமுகதிருக்கு நன்றி.... கதையை மிகவும் சுவாரிசியமாக விவரித்து உள்ளீர்கள், காமிக்ஸ் படித்த அனுபவத்தை குடுத்து உங்கள் எழுத்துகள் . நன்றி..வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ்.
      இப்பொழுதான் சற்று பெரிய பதிவுகள் இட ஆரம்பித்துள்ளேன்.
      எல்லாம் நம் நண்பர்களின் ஆதரவினால் தான் நண்பரே.

      Delete
  10. கிருஷ்ணா வெல்க வாழ்க பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. மாயாவி, மான்ட்ரேக் இன்னும் சில காமிக்ஸ் தவிர தமிழில் காமிக்ஸில் பெரியளவில் அறிமுகம் கிடையாது. அழகா கதையை சொல்லியிருக்கீங்க. நன்றி. :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.
      அடிகடி இந்த பக்கம் வாங்க.
      உங்க கருத்தையும் சொல்லுங்க.

      Delete
  12. எனக்கு 3 வயது இருக்கும் போது இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. அருமை அருமை. அப்படியே 80 களுக்கு இந்தப் பதிவு அழைத்துச் சென்றுவிட்டது.

    கதை அருமை அப்படியே தமிழ்வாணன் கதை வாசிப்பது போல இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள் அப்பொழுது எனக்கும் மூன்று வயது தான்.
      உண்மை சற்றே தமிழ்வாணனின் பாதிப்பு இருக்கிறது.

      Delete
  13. லயனை தவிர மற்ற காமிக்ஸ்கள் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. இருந்தாலும் இது நல்ல ஒரு த்ரில்லர். துப்பறியும் கதைகளில் இப்படி படித்திருக்கிறேன். காமிக்ஸில் இல்லை. பிழை இல்லாமல் இருப்பதற்கு மெனக்கெட்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ்.
      உங்கள் அளவிற்கு இல்லை பிழைகள் மட்டும் அல்லாமல் அலைன்மேன்டிலும் கலக்கிஉள்ளீர்கள்.
      பதிவை பார்க்கும் போதே ஒரு ஈர்ப்பு வருகிறது.
      நானும் அது போல முயற்சி செய்கிறேன்.

      Delete
  14. *************************இந்த கதையை நான் படித்த பொழுது ஒரு சஸ்பென்ஸ் திரைப்படம் பார்த்தது போல இருந்தது.மற்றும் இக்கதையில் வரும் பெயர்கள் மற்றும் இடங்கள் நமக்கு மிகவும் பரிச்சயமாக இருந்தது.***************************************

    எனக்கும்தான் நண்பரே,சௌந்தர் போலவே தங்கள் கதை சொல்லும் திறனும் பளிச்சிடுகிறது,தங்கு தடையின்றி தங்கள் கதை சொல்லும் திறனால் அருமை, புத்தகத்தை படிப்பது போலவே இருந்தது.இந்த கதை நான் படித்தேனா என்பது நினைவில் இல்லை ,கதையின் பெயர் படித்தது போல உள்ளது,கதை சுத்தமாக நினைவில் இல்லை...........ஆரம்ப கால பொன்னி காமிக்ஸ் அருமைதான்,கதைகள் சிறப்பாக இருக்கும்,ஓவியங்கள் ஒன்றும் மோசமாக இல்லை என்பது எனது எண்ணம்.ஓவியம் எப்படியோ,கதைகள் அற்புதம்தான்,ஆரம்ப காலங்களில் .....சீனத்து சிங்கம் என்று இரண்டு கதைகள் வந்தன ,வரலாற்றுடன் அற்புதமான பழி வாங்கும் கதை ,தங்களிடம் உள்ளதா,இருந்தால் பதிவிடுங்களேன்.....சிறந்த கதைகள் மட்டும் பதிவிடலாம் தவறில்லை........

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.இப்பொழுதான் எனது பதிவு முழுமை அடைந்தது.

      Delete
  15. நண்பரே பாலாஜி சுந்தர் , நீண்ட நாட்களாய் தங்களை காணவில்லையே ! நானும் காணவில்லை என்ற விளம்பர அறிவிப்பு தரலாம் என இருந்தேன்........தங்களது வரவு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ........தங்கள் நீண்ட சுவையான கருத்துக்களுக்கு காத்திருக்கும் பலரில் ஒருவன் ..............

    ReplyDelete